பேட்டிங் வரிசையில் 8-வது இடம் அவருக்கானதல்ல - தோனி குறித்து இந்திய முன்னாள் வீரர் கருத்து
|ஐ.பி.எல்.தொடரில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் எம்.எஸ். தோனி பேட்டிங் வரிசையில் 8-வது இடத்தில் இறங்கி அதிரடியாக விளையாடினார்.
புதுடெல்லி,
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 3-வது போட்டியில் டெல்லியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஆனால் அந்த தோல்வியை மறக்கும் அளவுக்கு தோனி பேட்டிங் செய்த விதம் சென்னை ரசிகர்களை கொண்டாட வைத்தது.
ஏனெனில் விசாகப்பட்டினத்தில் நடந்த அப்போட்டியில் 192 ரன்களை துரத்திய சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 1, ரச்சின் ரவீந்திரா 3, சமீர் ரிஸ்வி 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் 8-வது வரிசையில் களமிறங்கிய தோனி சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரியை பறக்க விட்டு மொத்தம் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 37 (16) ரன்கள் குவித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். குறிப்பாக கடைசி ஓவரில் 4, 6, 0, 4, 0, 6 என 4 பவுண்டரிகளை தெறிக்கவிட்டார். இருப்பினும் இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது.
இந்நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய எம்.எஸ். தோனி 148 ரன்கள் விளாசி இந்தியாவுக்காக முதல் சதமடித்த பார்மில் தற்போது இருப்பதாக முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார். எனவே அடுத்த போட்டிகளில் சற்று மேல் வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்து சென்னைக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தோனியை கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"அவர் ரஞ்சிக்கோப்பை அல்லது கிளப் போட்டிகள் அல்லது இந்தியாவுக்காக விளையாடவில்லை. நேரடியாக ஐ.பி.எல். தொடரில் மட்டுமே விளையாடுகிறார். ஆனால் இன்று பேட்டிங் செய்த விதத்திற்கு 8-வது இடம் அவருக்கானதல்ல. அவர் கண்டிப்பாக 4 அல்லது ஐந்தாவது இடத்தில் விளையாட வேண்டும். இப்போது ஓரிரு பந்துகளை மட்டுமே விளையாடும் தோனிக்கு 8-வது இடம் கீழானது. எனவே இன்று நாம் பார்த்த பார்முக்கு தோனி முன்னதாகவே வந்து சென்னைக்கு போட்டிகளை வென்று கொடுக்க உதவி செய்ய வேண்டும்.
டெல்லி பவுலிங் நன்றாக இருந்தது. ரிஷப் பண்ட் பார்முக்கு வந்துள்ளார். ஆனால் தோனிதான் விசாகப்பட்டினத்தில் நட்சத்திர ஒளியைப் பெற்றார். தோனி தன்னுடைய கெரியரை விசாகப்பட்டினத்தில்தான் துவங்கினார். பாகிஸ்தானுக்கு எதிராக அவர் சதமடித்தபோது நான் களத்தில் இருந்தேன். பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய சிக்சர்கள் அடித்த நீண்ட முடியுடன் கூடிய தோனி இன்று வந்துள்ளார். அவருடைய பேட்டில் வரும் சத்தம் பிரமாதமாக இருக்கிறது. அது வரும் போட்டிகளில் எதிரணி பவுலர்களுக்கான எச்சரிக்கையாகும். ஏனெனில் இந்த ஐ.பி.எல். தொடரில் தோனியின் பார்ம் தொடரும் என்று கருதுகிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.