அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து சாம் பில்லிங்ஸ் விலகல்
|அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகுவதாக சாம் பில்லிங்ஸ் நேற்று அறிவித்தார்.
புதுடெல்லி,
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2023) ஏப்ரலில் தொடங்கி 2½ மாதங்கள் நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களை அணிகள் தக்கவைத்து கொள்ள இன்று (15-ந் தேதி) கடைசி நாளாகும். அடுத்த சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் கொச்சியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 23-ந் தேதி நடக்கிறது.
இந்த நிலையில் கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான 31 வயது சாம் பில்லிங்ஸ் அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.
இது குறித்து பில்லிங்ஸ் தனது டுவிட்டர் பதிவில், 'அடுத்த ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க மாட்டேன் என்ற கடினமான முடிவை நான் எடுத்து இருக்கிறேன். கோடை சீசனில் வரும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புகிறேன். எனக்கு வாய்ப்பு அளித்த கொல்கத்தா அணிக்கு மிக்க நன்றி. அருமையான அந்த அணிக்காக விளையாடிய ஒவ்வொரு நிமிடத்தையும் நேசித்தேன். வருங்காலத்தில் மீண்டும் உங்களை சந்திக்க முடியும் என்று நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சாம் பில்லிங்ஸ் இங்கிலாந்து அணிக்காக 3 டெஸ்ட், 25 ஒருநாள் மற்றும் 37 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்த ஆண்டு கொல்கத்தா அணியால் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்ட அவர் 8 ஆட்டங்களில் ஆடி 169 ரன்கள் எடுத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதற்கிடையே, அடுத்த ஐ.பி.எல். போட்டிக்காக கொச்சியில் நடக்க உள்ள வீரர்கள் மினி ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்வேன் என்று இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் 6 ஆட்டங்களில் ஆடி 4 விக்கெட் வீழ்த்திய அவர் அதிக ரன் கொடுக்காமல் சிக்கனமாக பந்து வீசி எதிரணியினருக்கு நெருக்கடி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.