ஐதராபாத்தில் அடுத்தடுத்த நாட்களில் போட்டி: உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் மீண்டும் மாற்றம் வருமா?
|உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஐதராபாத்தில் அடுத்தடுத்து இரு நாட்கள் போட்டிகள் நடத்துவது உகந்தது அல்ல. அதை மாற்ற வேண்டும் என்று ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,
உலகக் கோப்பை கிரிக்கெட்
10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெறுகிறது. அக்.5-ந்தேதி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் கடந்த 9-ந்தேதி சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆமதாபாத்தில், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதல் அக்டோபர் 15-ந்தேதி நடப்பதாக இருந்தது. அன்றைய திறம் அங்கு நவராத்திரி கொண்டாட்டம் தொடங்குவதால் முக்கியமான இந்த போட்டிக்கு பாதுகாப்பு அளிப்பது சிரமம் என்று போலீசார் கூறியதையடுத்து அந்த ஆட்டம் ஒரு நாள் முன்னதாக அக்.14-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. இதன் எதிரொலியாக மேலும் 8 ஆட்டங்களின் தேதிகளிலும், தொடங்கும் நேரத்திலும் சில மாற்றங்களை செய்ய வேண்டியதானது. அதில் அக்டேபர் 12-ந்தேதி நடக்க இருந்த பாகிஸ்தான்- இலங்கை இடையிலான லீக் ஆட்டம் அக்.10-ந்தேதிக்கு (ஐதராபாத்) மாற்றப்பட்டதும் அடங்கும்.
இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டி அட்டவணையில் மேலும் ஒரு மாற்றம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐதராபாத்தில்...
ஐதாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் அக்.9-ந்தேதி நியூசிலாந்து- நெதர்லாந்து ஆட்டமும், அக்.10-ந்தேதி பாகிஸ்தான்-இலங்கை ஆட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரு நாட்கள் போட்டி நடந்தால் போதுமான பாதுகாப்பு அளிப்பது கடினம். எனவே இதில் மாற்றம் செய்ய வேண்டும் என்று உள்ளூர் போலீசார் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து ஐ.பி.எல். கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'போட்டி அட்டவணை நிச்சயம் மாற்றப்படுமா என்பது உறுதியாக சொல்ல முடியாது. இடைவெளியின்றி அடுத்தடுத்த நாளில் இரு ஆட்டங்கள் நடப்பது சரியானது அல்ல. எனவே போட்டி அட்டவணையில் மாற்றம் செய்வது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும். யாராக இருந்தாலும் உலகக் கோப்பையில் இரு ஆட்டத்திற்கு இடையே குறைந்தது ஒரு நாள் இடைவெளியாவது இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். போட்டி அட்டவணையில் மாற்றம் என்பது சாத்தியமோ? இல்லையோ? நாங்கள் பாதுகாப்பு குழுவினருடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுகிறோம். எங்களது நிலைமை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு முழுமையாக தெரியும்' என்றார்.
வாய்ப்பில்லை
ஆனால் உலகக் கோப்பை போட்டி அட்டவணையில் மீண்டும் ஒரு மாற்றம் செய்ய வாய்ப்பே இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், 'உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஐதராபாத் மைதானத்திற்கு நான் தான் பொறுப்பு. ஏதாவது சிக்கல் எழுந்தால் அதை சரி செய்ய முயற்சிப்போம். உலகக் கோப்பை போட்டியில் மாற்றம் செய்வது எளிதானது அல்ல. எனவே அது நடக்க வாய்ப்பில்லை. போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியத்தால் மட்டும் மாற்றம் செய்து விட முடியாது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), ஒளிபரப்புதாரர்கள் உள்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்கும் இருக்கிறது' என்றார்.
வழக்கமாக ஐதராபாத்தில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு 2 ஆயிரம் முதல் 2500 போலீசார் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பாகிஸ்தான் போட்டி இருப்பதால் பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.