< Back
கிரிக்கெட்
அடுத்த 2 ஐ.சி.சி. கோப்பைகளையும் ரோகித் தலைமையில் நிச்சயம் வெல்வோம் - ஜெய்ஷா நம்பிக்கை

image courtesy: PTI

கிரிக்கெட்

அடுத்த 2 ஐ.சி.சி. கோப்பைகளையும் ரோகித் தலைமையில் நிச்சயம் வெல்வோம் - ஜெய்ஷா நம்பிக்கை

தினத்தந்தி
|
7 July 2024 3:40 PM IST

அடுத்த வருடம் 2 ஐ.சி.சி. தொடர்கள் நடைபெற உள்ளன.

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது.

வெற்றி வாகை சூடியதும் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் விராட் கோலி அறிவித்தார். அவரை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார். இவர்களுடன் ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வை அறிவித்தார். இவர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட், ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளனர்.

தற்போது இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றுள்ள நிலையில், அடுத்த ஆண்டு 2 ஐ.சி.சி. தொடர்கள் நடக்கவுள்ளன. பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடரும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வீடியோ வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, "வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக இந்திய அணியை வாழ்த்துகிறேன். இந்த டி20 உலகக்கோப்பையை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு அர்ப்பணிக்கிறேன். கடந்த ஓராண்டில் இந்திய அணி 3 ஐசிசி இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறது. ஜூன் மாதத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தோம். அதன்பின் நடந்த உலகக்கோப்பை தொடரின் 10 வெற்றிகளை தொடர்ந்து ஈட்டி, மக்களின் மனங்களை வென்றோம். ஆனால் உலகக்கோப்பையை நம்மால் வெல்ல முடியவில்லை.

அப்போது ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சியின்போது, அடுத்த ஐசிசி தொடரில் மக்களின் மனங்கள் மட்டுமல்லாமல் கோப்பையையும் வெல்வோம் என்று கூறியிருந்தேன். அது சரியாக நடந்துள்ளது. இந்த வெற்றிக்கு கடைசி 5 ஓவர்கள் மிகமுக்கியமான காரணம். அதற்காக சூர்யகுமார் யாதவ், பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்திய அணியின் அடுத்த இலக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும், சாம்பியன்ஸ் டிராபி தொடரும்தான். ரோகித் சர்மாவின் கேப்டன்சிக்கு கீழ் இரண்டு கோப்பைகளையும் நிச்சயம் வெல்வோம் என்று நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்