முதல் இன்னிங்சில் சுருண்ட நியூசிலாந்து...2-வது நாளில் ஆஸ்திரேலியா தடுமாற்றம்
|ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 383 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
வெலிங்டன்,
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாளில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ரன்கள் அடித்திருந்தது. கிரீன் 103 ரன்களுடனும், ஹேசில்வுட் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர்.
நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 4 விக்கெட்டுகளும், வில்லியம் ஒ ரூர்க் மற்றும் ஸ்காட் குகெலீஜ்ன் தலா 2 விக்கெட்டுகளும், ரச்சின் ரவீந்திரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர்.
இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த கிரீன் - ஹேசில்வுட் இணை மேற்கொண்டு 104 ரன்கள் அடித்து அணிக்கு வலுவூட்டினர். இவர்களில் ஹேசில்வுட் 22 ரன்களில் மேட் ஹென்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கிரீன் 174 ரன்கள் குவித்த நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 116 ரன்கள் குவித்தது சிறப்பானதாகும். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 383 ரன்களில் ஆல் அவுட் ஆனது.நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மேட் ஹென்ரி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 179 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 71 ரன்களும், மேட் ஹென்ரி 42 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுமித் முதல் ஓவரிலேயே கிளீன் போல்டு ஆனார். அடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆஸ்திரேலிய அணி 2-வது நாளில் 2 விக்கெட்டுகளை இழந்து 13 ரன்களுடன் தடுமாறி வருகிறது.
உஸ்மான் கவாஜா 5 ரன்களுடனும், லயன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். ஆஸ்திரேலிய அணி தற்போது வரை 217 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.