இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழு தலைவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ புதிய அறிவிப்பு
|வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பு தேர்வுக் குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது
மும்பை,
இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணியின் தேர்வுக் குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா அப்பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில் புதிய தேர்வுக்குழு தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியை இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரப்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பு தேர்வுக் குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
மேலும் தலைவர் பதவிக்காக தகுதியையும் வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சம் 7 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் அல்லது 30 முதல் தர போட்டிகள் அல்லது 10 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 20 முதல் தர போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். எந்த ஒரு கிரிக்கெட் கமிட்டியிலும் மொத்தம் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர்கள் ஆண்கள் அணி தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருக்க தகுதி பெற மாட்டார்கள் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டியலிடப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.