இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்
|இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகவும் பிரண்டன் மெக்கல்லம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன்,
இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ மோட் அப்பதவியிலிருந்து சமீபத்தில் விலகினார். இவரது பயிற்சியின் கீழ் 2022 டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி, 2023 ஒருநாள் உலகக்கோப்பை, 2024 டி20 உலகக்கோப்பையில் தோல்வியை தழுவியது.
இதன் காரணமாக பதவிக்காலம் முடியும் முன்னரே, தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து மேத்யூ மேட் விலகியதாக தகவல்கள் வெளியாகின. மேத்யூ மோட் பதவி விலகியதை அடுத்து இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்கஸ் ட்ரெஸ்கோதிக் இடைக்கால தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் (ஒருநாள் மற்றும் டி20) புதிய தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகவும் பிரண்டன் மெக்கல்லம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.