நேபாளம்: பாலியல் குற்றவாளியான சந்தீப்பை கிரிக்கெட் பயிற்சி முகாமில் சேர்க்க கூடாது என ஆர்ப்பாட்டம்
|நேபாளத்தில் பாலியல் வழக்கில் குற்றவாளியான சந்தீப்பை கிரிக்கெட் பயிற்சி முகாமில் சேர்க்க கூடாது என கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காத்மாண்டு,
நேபாள நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் சந்தீப் லமிச்சானே. சுழற்பந்து வீச்சாளராக சிறப்புடன் விளையாடிய சந்தீப் மீது கவுசாலா பெருநகர காவல் துறையிடம் 17 வயது டீன்-ஏஜ் சிறுமி ஒருவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 6-ந்தேதி பாலியல் வன்கொடுமை புகார் கூறினார்.
அதில், நான் சந்தீப்பின் தீவிர ரசிகை. அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் வழியே தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். என்னை சந்திக்க வேண்டும் என முதன்முதலில் அவரே என்னிடம் ஆவலுடன் கூறினார் என அந்த சிறுமி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
காத்மாண்டு ஓட்டல் ஒன்றில் தம்மை சந்தீப் ரூமுக்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தன்னை 2 முறை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார் என்றும் அந்த புகாரில் தெரிவித்து இருக்கிறார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 21-ந்தேதி பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புகார் அளித்த 2 நாட்களுக்கு பின் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதே நாளில் அவரை நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. அவர் கருப்பு பட்டியலிலும் வைக்கப்பட்டார்.
இதன்பின், 2022-ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி காலை காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய சந்தீப், உடனடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றவர்.
இந்நிலையில், நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பின் கூட்டம் பொக்காரா நகரில் கடந்த ஜனவரி 31-ந்தேதி இரவு நடந்தது. இதில், சந்தீப் லமிச்சானே மீது பிறப்பிக்கப்பட்ட சஸ்பெண்டு உத்தரவை நீக்குவது என முடிவானது. அதுபற்றி பிப்ரவரி 1-ந்தேதி முடிவு அறிவிக்கப்படும் என கூட்டமைப்பு அதிகாரி பிரேந்திரா பகதூர் சந்தா கூறினார்.
இந்த சூழலில், சந்தீப்பை ஜாமீனில் விடுவது என்ற பதான் ஐகோர்ட்டு முடிவுக்கு எதிராக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவானது. அரசு வழக்கறிஞர் சார்பில் தாக்கலான மனுவில், பாலியல் வன்கொடுமை குற்றவாளியான கிரிக்கெட் வீர் சந்தீப் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 4 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாட அவரை நேபாள கிரிக்கெட் அணி அனுமதித்து, அணியில் சேர்த்து உள்ளது. இதுபற்றி கடந்த 2-ந்தேதி அந்த அணியின் தேர்வு அதிகாரி திபேந்திரா சவுத்ரி கூறும்போது, 4 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கு அணிக்கு அவர் தேவைப்படுகிறார்.
அதனால், நாளை முதல் (3-ந்தேதி) பயிற்சி தொடங்க உள்ளது. சந்தீப்பின் உடல் மற்றும் மனநலத்திற்கு ஏற்ப அவர் கலந்து கொள்வார் என கூறியுள்ளார்.
இதற்கு நேபாளத்தில் பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, பாலியல் வழக்கில் குற்றவாளியான சந்தீப்பை கிரிக்கெட் பயிற்சி முகாமில் சேர்க்க கூடாது என கோரி காத்மாண்டு நகரில் போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் சந்தீப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடியும், வாசகங்கள் எழுதிய காகிதங்களை ஏந்தியபடியும் காணப்பட்டனர். சந்தீப் தற்போது, 20 லட்சம் நேபாள கரன்சி மதிப்பின்படி, ஜாமீனில் வெளியே உள்ளார். தொடர்ந்து விசாரிக்கப்பட்டும் வருகிறார்.