என்னுடைய திட்டம் இதுதான்...அந்த 2 இந்திய பவுலர்களிடம் நிறைய திறமை இருக்கு - ஆட்ட நாயகன் ஸ்டார்க்
|ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
அகமதாபாத்,
ரசிகர்களை மகிழ்வித்து வரும் 17-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை தீர்மானிக்கும் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபயர் 1) நேற்று நடைபெற்றது. அதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத், கொல்கத்தா அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 159 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக திரிபாதி 55 ரன்கள் அடித்தார். கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 51, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன்கள் விளாசி 13.4 ஓவர்களிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.
கொல்கத்தா அணியின் இந்த வெற்றிக்கு ஆரம்பத்திலேயே டிராவிஸ் ஹெட்டை டக் அவுட்டாக்கி மொத்தம் 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஆரம்பத்திலேயே ஸ்விங் செய்து ஸ்டம்ப் லைனில் பந்து வீசி டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்கியதாக ஸ்டார்க் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-
"பவர் பிளே எவ்வளவு முக்கியம் என்பது எங்களுக்கு தெரியும். இந்த 2 அணிகளுமே பவர் பிளே ஓவர்களில் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடியுள்ளனர். எனவே ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை எடுத்து மிடில் ஆர்டரில் அழுத்தத்தை கொடுக்க வேண்டிய நிலைமை எங்களுக்கு ஏற்பட்டது. இந்த வருடம் முழுவதும் அபிஷேக் மற்றும் ஹெட் ஆகியோர் சுதந்திரமாக விளையாடி அடித்து நொறுக்கினர். எனவே நாங்கள் அவர்களுக்கு எதிராக பந்தை ஸ்விங் செய்து அடிப்பதற்கு தேவையான அகலத்தை கொடுக்காமல் இருக்க முயற்சித்தோம்.
ஸ்டம்ப் லைனில் கடினமான லென்த்தில் வீச முயற்சித்தோம். எங்கள் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். எங்களுடைய மொத்த பவுலிங் துறையும் சிறப்பாக செயல்பட்டது. ஹெட் விக்கெட்டை அதிர்ஷ்டத்துடன் எடுத்தேன் என்று நினைக்கிறேன். ஆரம்பத்திலேயே கிடைத்த அந்த விக்கெட் எப்போதும் கிடைக்காது. சமீப காலங்களில் நாங்கள் எதிரெதிர் அணிகளில் விளையாடியுள்ளோம்.
வைபவ் அரோரோ - ஹர்ஷித் ராணா ஆகிய நுணுக்கங்களை கொண்ட திறமையான இந்திய வீரர்களை பார்ப்பது ஆர்வமாக இருக்கிறது. அவர்கள் கடினமாக பயிற்சி எடுக்கின்றனர். அவர்களிடம் நிறைய திறமை இருக்கின்றது. ஹர்ஷித் இந்த வருடம் சிறப்பாக செயல்படுகிறார். எங்களுடைய பவுலிங் அட்டாக் சிறப்பாக அற்புதமாக இருக்கிறது. ஒரு மூத்த வெளிநாட்டு வீரராக அதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. அவர்கள் இன்னும் ஐ.பி.எல். தொடரிலும் இந்தியாவுக்காகவும் விக்கெட்டுகளை எடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை" என்று கூறினார்.