எனது அம்மாவும், பாட்டியும் மகிழ்ச்சியில் அழத்தொடங்கினர்... சன்ரைசர்ஸ் ஏலத்தில் எடுத்தபின் மனம்திறக்கும் ஹாரி புரூக்
|இங்கிலாந்தை சேர்ந்த பேட்ஸ்மேனான ஹாரி புரூக்கை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ.13.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
கொச்சி,
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது .
கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் ரூ.167 கோடி செலவு செய்து 29 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 80 வீரர்களை ஏலத்தில் எடுக்கப்பட்டது
இதில் இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி வீரரான ஹாரி புரூக்கை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ.13.25 கோடிக்கு வாங்கியது.
ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, அதிகபட்ச தொகை கொடுத்து ஒரு வீரரை வாங்கியது இதுவே முதல் முறையாகும். சன்ரைசர்ஸ் அணி தன்னை ஏலத்தில் எடுத்தது குறித்து ஹாரி புரூக் கூறுகையில்,
"ஹாய் ஆரஞ்சு ஆர்மி. இந்த ஆண்டு ஐபிஎல்-லில் விளையாட மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாட நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன்.
நான் எனது அம்மா மற்றும் பாட்டியுடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது சன்ரைசர்ஸ் அணி தன்னை ஏலத்தில் வாங்கியது. அப்போது எனக்கு வார்த்தைகளே வரவில்லை. எனது அம்மா மற்றும் பாட்டி இருவரும் மகிழ்ச்சியில் அழுதுவிட்டனர். தன்னை ஏலத்தில் எடுத்ததற்காக நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
ஹாரி புரூக் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 93.60 சராசரியில் 468 ரன்கள் எடுத்தார். மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் மற்றும் சிறந்த ஸ்கோரான 153 ரன்களை எடுத்தார். அவருக்கு 'தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.