< Back
கிரிக்கெட்
என்னுடைய சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. ஆனாலும் எனக்கு ஏற்ற பரிசு கிடைத்ததாகவே நினைக்கிறேன்- மிட்செல் சான்ட்னர்

image courtesy; twitter/@ICC

கிரிக்கெட்

'என்னுடைய சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. ஆனாலும் எனக்கு ஏற்ற பரிசு கிடைத்ததாகவே நினைக்கிறேன்'- மிட்செல் சான்ட்னர்

தினத்தந்தி
|
10 Oct 2023 8:46 AM IST

உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

ஐதராபாத்,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 6-வது ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் பலம் வாய்ந்த நியூசிலாந்து 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்தது. பின் வரிசையில் ஆல்ரவுண்டரான மிட்சல் சான்ட்னர் 17 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 36 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் அணியின் ரன் குவிப்பிற்கு உதவினார்.

பின்னர் 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மிட்சல் சான்ட்னர் 10 ஓவர்கள் வீசி 59 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்திய சான்ட்னர் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தெர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய சான்ட்னர், இந்த ஆட்டத்தில் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே நல்ல அடித்தளத்தை அமைத்ததால் பின் வரிசையில் எங்களால் சிறப்பாக விளையாட முடிந்தது. அதன் காரணமாக அணியின் எண்ணிக்கையும் 320 ரன்களை கடந்தது. இந்த ஆட்டத்தில் நான் என்னுடைய சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்றாலும் எனக்கு ஏற்ற பரிசு கிடைத்ததாகவே நினைக்கிறேன். இந்த ஆட்டத்தில் மைதானம் உதவியதால் என்னால் விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. எங்களது அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்