ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தை தவறவிடும் முஸ்தாபிசுர் ரஹ்மான் - காரணம் என்ன..?
|சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 5ம் தேதி ஐதராபாத்துடன் மோத உள்ளது.
சென்னை,
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்த நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இதுவரை 15 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதன் முடிவில் ராஜஸ்தான் (6 புள்ளி), கொல்கத்தா (4 புள்ளி), சென்னை (4 புள்ளி), லக்னோ (4 புள்ளி), குஜராத் (4 புள்ளி), அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்த தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி 3 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வரும் 5ம் தேதி ஐதராபாத்தில் சந்திக்கிறது.
இந்நிலையில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக முஸ்தாபிசுர் ரஹ்மான் தனது அமெரிக்க விசாவைப் பரிசீலிப்பதற்காக வங்காளதேசம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விசா மீதான பரிசீலனை முடிவுற்ற பின் அவர் வரும் 7 அல்லது 8ம் தேதிகளில் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் 8ம் தேதி இந்தியா திரும்புவதாக இருந்தால் அவர் அன்று நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தையும் தவற விட வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக சென்னை ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். நடப்பு ஐ.பி.எல் தொடரில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 ஆட்டங்களில் ஆடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.