உலகக் கோப்பையில் ஆயிரம் ரன்களை கடந்த முஷ்பிகுர் ரஹிம்
|முஷ்பிகுர் ரஹிம் உலகக் கோப்பையில் ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது வங்காளதேச வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
புனே,
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 17-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. பின்னர் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் அரைசதம் அடித்து 53 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் அவருக்கு கே.எல்.ராகுல் பக்கபலமாக இருந்தார். கடைசியில் சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்ததுடன், ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தார் விராட் கோலி.
முடிவில் இந்திய அணி 41.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 103 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி, உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி, தனது அடுத்த லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது
* இந்த போட்டியில் வங்காளதேச தொடக்க ஆட்டக்காரர்கள் தன்சித் ஹசன்- லிட்டான் தாஸ் முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். உலகக் கோப்பையில் அந்த அணி தொடக்க விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இது தான். இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக மெராப் ஹூசைன்- ஷாரியார் ஹூசைன் ஜோடி 69 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
* விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 4 ரன் எடுத்த போது உலகக் கோப்பையில் ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது வங்காளதேச வீரர் என்ற சிறப்பை பெற்றார். அவர் இதுவரை 33 ஆட்டங்களில் ஆடி 1,034 ரன்கள் எடுத்துள்ளார். ஏற்கனவே வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் (32 ஆட்டத்தில் 1,201 ரன்) இந்த இலக்கை கடந்துள்ளார்.
* 5-வது உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள 36 வயதான முஷ்பிகுர் ரஹிம், வங்காளதேச அணிக்காக அதிக உலகக் கோப்பை ஆட்டங்களில் விளையாடியவர் (33 ஆட்டம்) என்ற சாதனையும் படைத்துள்ளார்.