மும்பை அணி ரோகித்தை கழற்றி விடும்... ஆனால் அந்த வீரரை மட்டும் விட வாய்ப்பில்லை - ஆகாஷ் சோப்ரா
|நிச்சயமாக மும்பை அணி ரோகித் சர்மாவை தக்க வைக்காது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
மும்பை,
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. இம்முறை மெகா ஏலம் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.
முன்னதாக கடந்த ஐ.பி.எல். தொடரின்போது 5 கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த ரோகித் சர்மாவை, வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பதவியிலிருந்து கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக நியமித்தது.
இதனால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா இந்த வருடம் மும்பை அணியிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. டி20 உலகக்கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த ரோகித் சர்மாவை வாங்க பஞ்சாப், டெல்லி, லக்னோ, பெங்களூரு போன்ற அணிகள் தயாராக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நிச்சயமாக மும்பை அணி ரோகித் சர்மாவை தக்க வைக்காது அல்லது ரோகித் தானாகவே விருப்பப்பட்டு மெகா ஏலத்தில் கலந்து கொள்வார் என்று இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அடுத்த சீசனில் மும்பை அணியுடன் ரோகித் சர்மா தொடர்வது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. நிச்சயமாக என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா மும்பை அணியிலிருந்து வெளியேறுவார் என்பதே என்னுடைய உள்ளுணர்வாக இருந்து வருகிறது. ஆனால் இது குறித்து அவர்களது தரப்பில் எந்த ஒரு தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை ரோகித் சர்மா ரீடெயின் செய்யப்பட்டால் மூன்று ஆண்டுகள் அந்த அணியில் நீடிக்க வேண்டும் என்பதனால் மும்பை அணியே அவரை தவிர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இப்படி ஏதாவது ஒரு வகையில் ரோகித் சர்மா அந்த அணியை விட்டு வெளியேறினாலும் மற்றொருபுறம் சூர்யகுமார் யாதவை அவர்கள் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் தற்போதைய இந்திய டி20 கேப்டனான அவரே அடுத்த சில ஆண்டுகளுக்கு மும்பை அணியின் முக்கியமான வீரராக இருக்கப் போவதால் நிச்சயம் சூர்யகுமார் யாதவை மும்பை அணி எக்காரணம் கொண்டும் வெளியேற்றாது" என்று கூறினார்.