மும்பை அணியின் வீரர்களே பாண்ட்யாவை கேப்டனாக ஏற்றுக்கொள்ளவில்லை - இர்பான் பதான்
|ரசிகர்களை தாண்டி முதலில் மும்பை அணியின் வீரர்களே பாண்ட்யாவை கேப்டனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.
மும்பை,
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் நுவான் துஷாரா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி ஆடியது.
மும்பை அணி வீரர்கள் கொல்கத்தாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் மும்பை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் வான்கடே மைதானத்தில் 12 வருடங்கள் கழித்து மும்பையை அதன் சொந்த மண்ணில் கொல்கத்தா தோற்கடித்தது. மறுபுறம் 11 போட்டிகளில் 8-வது தோல்வியை பதிவு செய்த மும்பை பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளது. குறிப்பாக ரோகித் சர்மாவை கழற்றி விட்டு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட பாண்ட்யா தலைமையில் மும்பை அணி முதல் வருடத்திலேயே லீக் சுற்றுடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரசிகர்களை தாண்டி முதலில் மும்பை அணியின் வீரர்களே ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று இர்பான் பதான் விமர்சித்துள்ளார். மேலும் ஆரம்பம் முதலே சுமாராக விளையாடி கேப்டனாக சொதப்பிய ஹர்திக் பாண்ட்யா மும்பையின் தோல்விக்கு முதன்மை காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் கதை முடிந்துள்ளது. பேப்பரில் அவர்கள் நல்ல அணியாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் சிறப்பாக வழி நடத்தப்படவில்லை. ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்ஷிப் பற்றிய கேள்வி செல்லுபடியாகும். இன்று கொல்கத்தா 57/5 என தடுமாறியபோது 6-வது பவுலரை பயன்படுத்திய நீங்கள் (ஹர்திக் பாண்ட்யா) மனிஷ் பாண்டே மற்றும் வெங்கடேஷ் ஐயரை வைத்து கொல்கத்தா முக்கிய பார்ட்னர்ஷிப் உருவாக்க விட்டீர்கள்.
150 ரன்கள் எடுத்திருக்க வேண்டிய கொல்கத்தா அந்த 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் காரணமாக 170 ரன்கள் எடுத்தது. இதுதான் வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் மற்றும் அணி நிர்வாகம் முக்கியமாகும். தற்சமயத்தில் மும்பை ஒரு அணியாக இணைந்து விளையாடவில்லை. அதுவே இந்த வருடம் அவர்கள் கற்க வேண்டிய பாடமாக அமைந்தது. அனைத்து வீரர்களும் உங்களுடைய கேப்டனை ஏற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். இந்த வருடம் மும்பை அணியில் அது நடந்ததாக எனக்கு தெரியவில்லை" என்று கூறினார்.