டெஸ்ட் கிரிக்கெட்; ஒரு இன்னிங்சில் 1 ரன் கூட கொடுக்காமல் விக்கெட் வீழ்த்தியவர்கள்...சாதனை பட்டியலில் இணைந்த முகேஷ் குமார்...!
|இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது.
கேப்டவுன்,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி களம் இறங்கியது.
இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 55 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 2வது இன்னிங்சை ஆடி வரும் தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்சில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகேஷ் குமார் 2.2 ஓவர்களை வீசி 1 ரன் கூட கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் ஒரு ரன் கூட கொடுக்காமல் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற சாதனையை முகேஷ் குமார் படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் ஒரு ரன் கூட கொடுக்காமல் விக்கெட் வீழ்த்தியவர்கள் சாதனை பட்டியலில் தற்போது முகேஷ் குமார் இணைந்துள்ளார்.
இதற்கு முன் உலக அளவில் 1959-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ரிச்சி பெனட் இங்கிலாந்துக்கு எதிராக 3 விக்கெட்களும் , 2021-ல் இங்கிலாந்தின் ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக 2 விக்கெட்டுகளும் 1 ரன் கூட கொடுக்காமல் எடுத்துள்ளனர்.