< Back
கிரிக்கெட்
டோனி மேலும் ஓராண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் - சுரேஷ் ரெய்னா விருப்பம்
கிரிக்கெட்

டோனி மேலும் ஓராண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் - சுரேஷ் ரெய்னா விருப்பம்

தினத்தந்தி
|
19 May 2024 10:05 PM GMT

நிச்சயமாக இது டோனியின் கடைசி போட்டியாக இருக்காது என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

புதுடெல்லி,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மயிரிழையில் அடுத்த சுற்று வாய்ப்பை கோட்டை விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. சென்னை அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான 42 வயதான டோனிக்கு இதுவே கடைசி ஐ.பி.எல். தொடராக இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அது குறித்து அவர் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த சீசனில் 11 இன்னிங்சில் களம் இறங்கிய டோனி 13 சிக்சர் உள்பட 161 ரன்கள் எடுத்தார். 3 முறை மட்டுமே விக்கெட்டை இழந்தார்.

இந்த நிலையில் டோனி 2025-ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியிலும் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரரும், அவரது நண்பருமான சுரேஷ் ரெய்னா வலியுறுத்தியுள்ளார். 'நிச்சயமாக இது டோனியின் கடைசி போட்டியாக இருக்காது என்று நம்புகிறேன். கேப்டன்ஷிப்பில் ருதுராஜ் கெய்க்வாட் முதிர்ச்சி பெற காலஅவகாசம் தேவையாகும். எனவே டோனி மேலும் ஒரு சீசன் விளையாட வேண்டும்.' என்று ரெய்னா கூறினார்.

இதே கருத்தை தெரிவித்த முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, 'பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தை டோனியின் கடைசி போட்டியாக நினைக்கவில்லை. தனது கிரிக்கெட் பயணத்தை அவர் இப்படி முடிப்பதை பார்க்க விரும்பவில்லை. பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினார். ஆட்டமிழந்த போது சற்று ஏமாற்றத்துடன் காணப்பட்டார். எனவே அவர் அடுத்த ஆண்டும் விளையாடலாம். இம்பேக்ட் விதிமுறை, டோனி கடைசி 3-4 ஓவர்களில் விளையாடும் வாய்ப்பை வழங்குகிறது. உண்மையிலேயே அவருக்கு அது உதவிகரமாக இருக்கிறது. எனவே இம்பேக்ட் விதிமுறையை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கக்கூடாது. ஏனெனில் டோனி இன்னும் விளையாடுவதை பார்க்க ஆசைப்படுகிறோம். முடிவு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கையில் உள்ளது' என்றார்.

மேலும் செய்திகள்