கேப்டன்ஷிப் குறித்து கடந்த ஆண்டே ருதுராஜிடம் மறைமுகமாக தெரிவித்த எம்.எஸ்.தோனி
|சென்னை சூப்பர் கிங்சின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதால் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட் உதயமான 2008-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த எம்.எஸ்.தோனி நேற்று அந்த பொறுப்பில் இருந்து திடீரென விலகினார். 42 வயதான தோனி கடந்த ஆண்டே கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட விரும்பினார். ஆனால் ரசிகர்களுக்காக மேலும் ஒரு சீசன் விளையாட இருப்பதாக அறிவித்தார்.
சமீபத்தில், எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியில் புதிய ரோலில் களம் இறங்க இருப்பதாக கூறி இருந்தார். அப்போதே அவர் கேப்டன் பதவியை துறக்கப்போகிறாரா? என்ற கேள்வி எழுந்தது. இன்னொரு பக்கம் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் 17-வது ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக அவர் கேப்டன்ஷிப்பை விட்டு ஒதுங்கியுள்ளார். அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சி.எஸ்.கே. அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ஒப்படைப்பது பற்றி போன வருடமே எம்.எஸ். தோனி தம்மிடம் மறைமுகமாக தெரிவித்ததாக ருதுராஜ் கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் பேஸ்புக் பக்கத்தில் புதிய ரோல் என்று தோனி பதிவிட்ட போது "நீங்கள்தான் சென்னையின் புதிய கேப்டனா" என்று அனைவரும் தம்மிடம் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே இந்த பொறுப்பை தோனி தம்மிடம் ஆச்சரியப்படும் வகையில் வழங்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"இதற்காக நான் மாற வேண்டும் என்று நினைக்கவில்லை. ஏதோ ஒரு தருணத்தில் கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுப்பேன் என்று கடந்த வருடமே தோனி மறைமுகமாக தெரிவித்திருந்தார். இந்த பொறுப்பை ஏற்க தயாராக இருங்கள் என்று தோனி கூறியிருந்தார். எனவே இம்முறை சி.எஸ்.கே. அணிக்காக விளையாட வந்தபோது அவர் வலைப்பயிற்சிகளை செய்தார்.
சமூக வலைதளத்தில் அவர் புதிய வேலை என்று பதிவிட்டது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது அனைவரும் நீங்கள்தான் அடுத்த கேப்டனா என்று என்னிடம் கேட்டனர். இருப்பினும் அந்தப் பதிவு வேறு எதற்காகவாவது இருக்கும் என்று நான் கருதினேன். ஆனால் கடந்த வாரம் வந்த அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொன்னார். அவர் கொடுத்த இந்த வேலையை செய்வதற்காக காத்திருக்கிறேன்" என்று கூறினார்.