எம்.எஸ். தோனியை முன்கூட்டியே களமிறக்க முடியுமா..? அப்படி நடந்தால்... - டேல் ஸ்டெயின்
|42 வயதிலும் அசத்தும் தோனி, தம்முடைய காதலியுடன் ஐ.பி.எல். போட்டிகளை பார்க்க வைத்துள்ளதாக ஸ்டெயின் பாராட்டியுள்ளார்.
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து விளையாடி வருகிறது. இம்முறை வருங்காலத்தை கருத்தில் கொண்டு அந்த அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த எம்.எஸ்.தோனி சாதாரண விக்கெட் கீப்பராக விளையாட வருகிறார். இருப்பினும் அவரை பார்ப்பதற்கு ஒவ்வொரு போட்டியிலும் ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
இதனிடையே இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான எம்.எஸ். தோனி நடப்பு சீசனில் டெல்லிக்கு எதிராக 36 (17 பந்துகள்) ரன்கள் அடித்து அசத்தினார். அதை விட மும்பைக்கு எதிராக கடைசி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்ட அவர் சி.எஸ்.கே. வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில் பொதுவாக தாம் அதிகமாக தொலைக்காட்சியில் ஐ.பி.எல். போட்டிகளை பார்ப்பதில்லை என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் கூறியுள்ளார். இருப்பினும் 42 வயதிலும் அசத்தும் தோனி, தம்முடைய காதலியுடன் ஐ.பி.எல். போட்டிகளை பார்க்க வைத்துள்ளதாக ஸ்டெயின் பாராட்டியுள்ளார். எனவே இன்னும் சற்று மேலே வந்து தோனி பேட்டிங் செய்தால் அதை பார்ப்பது நன்றாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் குறித்து பேசியது பின்வருமாறு:-
" தோனி விளையாடிய விதம் ஐ.பி.எல்-லை மட்டுமல்ல என்னைப் போன்ற பல தென் ஆப்பிரிக்கர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் அதிகம் டிவி பார்ப்பதில்லை. ஆனால் ஐ.பி.எல். இருக்கும்போது நான் இருக்கையில் ஒட்டிக்கொண்டதுபோல் தெரிகிறது. இதற்கு முன் ஒரு பவுலராக தோனியிடம் அடி வாங்க வேண்டிய இடத்தில் நான் இருந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் தற்போது ரசிகர்களின் பார்வையில் பார்க்கும்போது நானும் அதை ரசிக்கிறேன். அது நல்ல மனநிலையையும் கொடுக்கிறது. எனவே எம்.எஸ். தோனியை முன்கூட்டியே களமிறக்க முடியுமா? அப்படி நடந்தால் நன்றாக இருக்கும்" என்று கூறினார்.