< Back
கிரிக்கெட்
பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம் - இந்திய பயிற்சியாளர் டிராவிட் பேட்டி
கிரிக்கெட்

'பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்' - இந்திய பயிற்சியாளர் டிராவிட் பேட்டி

தினத்தந்தி
|
6 Feb 2023 3:37 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக இந்திய பயிற்சியாளர் டிராவிட் கூறியுள்ளார்.

நாக்பூர்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 9-ந்தேதி மராட்டிய மாநிலம் நாக்பூரில் தொடங்குகிறது. இதையொட்டி ஆஸ்திரேலிய வீரர்கள் பெங்களூரு புறநகரான ஆலூரிலும், இந்திய வீரர்கள் நாக்பூரில் உள்ள மற்றொரு ஸ்டேடியத்திலும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பயிற்சியின் போது தலைமை பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ராகுல் டிராவிட் வீரர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார். குறிப்பாக ஸ்லிப் பகுதியில் கேட்ச் செய்வதில் கூடுதல் அக்கறை காட்டுகிறார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்ச் செய்த பீல்டர் (210 கேட்ச்) என்ற சிறப்பு டிராவிட்டுக்கு உண்டு.

இது தொடர்பாக அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அளித்த பேட்டி டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

"அணியில் ஒவ்வொருவரும் நல்ல நிலையில் உள்ளனர். டெஸ்ட் போட்டிக்காக மீண்டும் ஒரு முறை இணைந்திருப்பது இனிமையான உணர்வை தருகிறது. ஓரிரு மாதங்கள் தொடர்ச்சியாக வெள்ளைநிற பந்து கிரிக்கெட் விளையாடி வந்தோம். அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் சிலர் வெள்ளைநிற பந்து போட்டியில் இருந்து சிவப்பு நிற பந்து கிரிக்கெட் (டெஸ்ட்) மீது தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பீல்டிங் மிகவும் முக்கியமான அம்சம் என்பதில் சந்தேகமில்லை. இந்த தொடரில் பேட்ஸ்மேனுக்கு நெருக்கமாக நின்று கேட்ச் செய்வது முக்கிய பங்கு வகிக்கும் என்று நினைக்கிறோம். அதனால் நெருக்கமான கேட்ச், ஸ்லிப் பகுதியில் நின்று பந்தை பிடிப்பது உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்."

இவ்வாறு டிராவிட் கூறினார்.

மேலும் செய்திகள்