தீப்தி சர்மா செய்த ரன் அவுட்: தோனியின் வீடியோவை பகிர்ந்து முன்னாள் இங்கிலாந்து வீரர் டுவீட்..!!
|தீப்தி சர்மாவால் இங்கிலாந்து வீராங்கனை சார்லீ டீன், பேட்டிங் திசையின் எதிர் முனையில் ரன் அவுட் செய்யப்பட்டது பேசுப் பொருளாகியுள்ளது.
லண்டன்,
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தின் 43-வது ஓவரில், இங்கிலாந்து வீராங்கனை சார்லீ டீன், இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவால் பேட்டிங் திசையின் எதிர் முனையில் ரன் அவுட் செய்யப்பட்டது தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.
ஐ.சி.சி.யின் புதிய கிரிக்கெட் விதிகளின்படி, மன்கட் முறையில் அவுட் செய்வது தற்போது ரன் அவுட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இங்கிலாந்து வீரர்கள் பலர் இதனை விமர்சித்து வருகின்றனர். தீப்தி சர்மாவிற்கு ஆதரவாகவும் பல வீரர் வீராங்கனைகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மான்டி பனேசரும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் மான்டி பனேசர் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங் திசையின் எதிர் முனையில் (நான்-ஸ்ட்ரைக்கர்ஸ் எண்டு) நிற்கின்றார். அப்போது பந்துவீச வரும் மும்பை வீரர் குருனால் பாண்டியா திடீரென பௌலிங் லைன் அருகே பந்துவீசாமல் நிற்க, தோனியும் லாவகமாக பேட்டை லைன்க்குள் வைக்கிறார்.
இந்த வீடியோவை பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் பேட்டை கிரீஸிற்குள் வைத்திருங்கள்" என தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவிற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.