< Back
கிரிக்கெட்
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்வி குறித்து முகமது கைப் விமர்சனம்

image courtesy: PTI

கிரிக்கெட்

ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்வி குறித்து முகமது கைப் விமர்சனம்

தினத்தந்தி
|
17 March 2024 2:54 PM IST

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. அந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் ஆரம்பம் முதலே மிரட்டலாக செயல்பட்டு வந்த இந்தியா அரையிறுதியில் முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்து தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்தது. ஆனால் அகமதாபாத் மைதானத்தில் நடந்த மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

அந்த போட்டியில் சுழலுக்கு சாதகமான மைதானத்தை அமைத்ததே இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்ததாக ஹர்பஜன் சிங் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் பைனலுக்கு முன்பாக 3 நாட்கள் தொடர்ந்து அகமதாபாத் பிட்ச்சை ராகுல் டிராவிட்- ரோகித் சர்மா ஆகியோர் நோட்டமிட்டதை தாம் பார்த்ததாக முகமது கைப் கூறியுள்ளார்.

அதனால் இறுதியில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக அமைத்ததே இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:- "நான் அங்கே (அகமதாபாத்) 3 நாட்கள் இருந்தேன். பைனலுக்கு 3 நாட்கள் முன்பாக ஒவ்வொரு நாளும் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் பிட்ச்சை கண்காணித்தனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் பிட்ச்சுக்கு அருகாமையில் ஒரு மணி நேரம் நின்று விவாதித்தனர்.

பின்னர் பிட்ச்சின் வண்ணம் மாறுவதை நான் பார்த்தேன். அதில் தண்ணீர் அடிக்கப்படவில்லை. புற்களும் இல்லை. அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு மெதுவான பிட்ச்சை இந்தியா வழங்க விரும்பியது. இதை மக்களும் ரசிகர்களும் நம்பவில்லை என்றாலும் இதுவே உண்மையாகும். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இந்தியா மெதுவான பிட்ச்சை கொடுக்கலாம் என்று விரும்பியது. அதுதான் நாம் செய்த தவறு.

பலரும் பிட்ச் தயாரிப்பவர்கள் தங்கள் வேலையை தாங்களே செய்தார்கள். வெளியில் இருந்து யாரும் அவர்களுக்கு எந்த உத்தரவும் போடவில்லை என்கிறார்கள். அது சுத்த முட்டாள்தனம். நீங்கள் பிட்ச்சை சுற்றி வருகிறீர்கள் என்றால் இரண்டு வரிகள் சொன்னால் போதும். "தயவுசெய்து பிட்ச்சில் தண்ணீர் விடாதீர்கள். புற்களை குறையுங்கள்" . அவர்கள் அதை செய்து விடுவார்கள். நாம் சொந்த மண்ணில் ஆடுகிறோம். அதனால் நாம் கொஞ்சம் அதிகப்படியாக பிட்ச்சில் வேலை செய்து விட்டோம்" என்று விமர்சித்துள்ளார்.

மேலும் செய்திகள்