< Back
கிரிக்கெட்
இந்திய டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பில்லை மெக்கல்லத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் மொயீன் அலி
கிரிக்கெட்

'இந்திய டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பில்லை' மெக்கல்லத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் மொயீன் அலி

தினத்தந்தி
|
4 Aug 2023 4:14 AM IST

இந்த முறை அவரது வேண்டுகோளை ஏற்க 36 வயதான மொயீன் அலி மறுத்து விட்டார்.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி 2021-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் ஆகியோரது வற்புறுத்தலை ஏற்று டெஸ்ட் ஓய்வில் இருந்து விடுபட்டு சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். 2-2 என்று சமனில் முடிந்த இந்த தொடரின் கடைசி டெஸ்டில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். அத்துடன் டெஸ்டில் இருந்து மீண்டும் விடைபெற்றார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்த தொடர் வரை தொடர்ந்து டெஸ்டில் விளையாடுவது குறித்து பரிசீலிக்கும்படி பயிற்சியாளர் மெக்கல்லம் அவரை மீண்டும் கேட்டு இருந்தார். இந்த முறை அவரது வேண்டுகோளை ஏற்க 36 வயதான மொயீன் அலி மறுத்து விட்டார். இது குறித்து மொயீன் அலி கூறுகையில் 'இந்தியாவுக்கு நான் சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை. எனது முடிவு அவர்களுக்கு (ஸ்டோக்ஸ், மெக்கல்லம்) தெரியும். அற்புதமான ஆஷஸ் வெற்றியுடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்து விட்டேன்.

எனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் ஏற்றம், இறக்கங்கள் நிறைந்தது. நான் அதை மாற்ற முடியாது. ஆஷஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஏற்க மறுத்து இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன். இனி வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்துவேன். 20 ஓவர் லீக் போட்டிகளிலும் விளையாடுவேன்' என்றார்.

மேலும் செய்திகள்