ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் மொயீன் அலி... ஆஷஸ் தொடருக்கான டெஸ்ட் அணியில் தேர்வு ..!
|ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் இந்த தொடர் மிகவும் முக்கியமான தொடராக கருதப்படும்.
இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துவதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரிய இழப்பாகவே இருந்து வந்தது.
இந்த ஆஷஸ் தொடரில் அவரை விளையாட வைப்பதற்காக அவரது முடிவை திரும்ப பெற வேண்டும் என்று அவரிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. மேலும் அவரிடம் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் மொயீன் அலி மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாட சம்மதம் தெரிவித்தார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். மொயீன் அலி பந்துவீச்சில் தாக்கம் ஏற்படுத்துவதுடன் சிறந்த முறையில் பேட்டிங் செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.