எம்.ஐ.எமிரேட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஷேன் பாண்ட் நியமனம்
|எம்.ஐ.எமிரேட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான 47 வயது ஷேன் பாண்ட் நேற்று நியமனம் செய்யப்பட்டார்.
ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் சார்பில் அடுத்த ஆண்டு (2023) முதல் 20 ஓவர் லீக் போட்டி நடத்தப்படுகிறது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான ஒரு அணியை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியை நிர்வகிக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. எம்.ஐ.எமிரேட்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கும் இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக 2015-ம் ஆண்டு முதல் இருந்து வரும் நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான 47 வயது ஷேன் பாண்ட் நேற்று நியமனம் செய்யப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கான இளம் வீரர்களை அடையாளம் காணும் பணியை கவனித்து வரும் இந்திய முன்னாள் வீரர்களான பார்த்தீவ் பட்டேல் பேட்டிங் பயிற்சியாளராகவும் வினய்குமார் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியவரான முன்னாள் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் பிராங்ளின் பீல்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் அங்கம் வகித்து வரும் இந்திய முன்னாள் ஆல்-ரவுண்டர் ராபின்சிங் பொதுமேலாளராக (கிரிக்கெட்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.