< Back
கிரிக்கெட்
இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தை தவறவிடுகிறார்

image courtesy: BCCI twitter via ANI

கிரிக்கெட்

இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தை தவறவிடுகிறார்

தினத்தந்தி
|
7 Oct 2023 3:59 AM IST

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய வீரர் சுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.

சென்னை,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அங்கம் வகிக்கும் 24 வயது தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ கமிட்டி உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. 3 நாட்களாக பயிற்சி இன்றி ஓய்வில் இருக்கிறார்.

இதனால் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவர் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. அவர் இல்லாதது இந்திய அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான். ஏனெனில் இந்த ஆண்டில் மட்டும் கில் ஒரு நாள் போட்டியில் 20 ஆட்டத்தில் ஆடி 5 சதம் உள்பட 1,230 ரன்கள் குவித்து 'நம்பர் ஒன்'னில் இருக்கிறார். அவருக்கு பதிலாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் இஷான் கிஷன் அல்லது லோகேஷ் ராகுல் ஆகியோரில் ஒருவர் தொடக்க ஆட்டக்காராக இறங்குவார்.

பொதுவாக டெங்கு பாதிப்பு வந்தால் அதில் இருந்து முழுமையாக மீள்வதற்கு 7 முதல் 10 நாட்கள் பிடிக்கும். அதனால் சுப்மன் கில் இந்திய அணிக்குரிய முதல் 2 அல்லது 3 ஆட்டங்களை தவற விடும் நிலைமையில் இருக்கிறார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'சுப்மன் கில் இப்போது நன்றாக இருக்கிறார். மருத்துவ கமிட்டி அவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவேண்டாம் என்று எதுவும் சொல்லவில்லை. எனவே நாளைய தினம் (இன்று) எந்த மாதிரி உணருகிறார் என்பதை பார்த்து அதற்கு ஏற்ப முடிவு செய்வோம்' என்றார்.

மேலும் செய்திகள்