மயங்க் யாதவ் காயத்துக்கு அவங்கதான் காரணம் - பிரட் லீ விமர்சனம்
|முழுமையாக குணமடைவதற்குள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக லக்னோ அணி நிர்வாகம் அவசரமாக களமிறக்கியதே மயங்க் யாதவ் மீண்டும் காயமடைய காரணம் என்று பிரட் லீ விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
ரசிகர்களை மகிழ்வித்து வரும் 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பல இளம் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் லக்னோ அணிக்காக அறிமுகமான மயங்க் யாதவ் தொடர்ச்சியாக 145 - 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
குறிப்பாக முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்று அவர் 2வது போட்டியிலும் குறைந்த ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருது வென்றார். அதனால் ஐ.பி.எல். வரலாற்றில் அறிமுகம் ஆன முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருது பெற்ற முதல் வீரர் என்ற மிகப்பெரிய சாதனை படைத்த அவர் நடப்பு சீசனில் வேகமான (157.6 கி.மீ) பந்தை வீசிய பவுலராகவும் சாதனை படைத்தார்.
அதனால் டி20 உலகக்கோப்பையிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர் - கவாஸ்கர் கோப்பையிலும் மயங்க் யாதவ் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் முழுமையாக 5 போட்டிகள் கூட விளையாடாத அவர் காயத்தை சந்தித்தார். அதன் பின் சில போட்டிகள் கழித்து மீண்டும் விளையாட வந்த அவர் முழுமையாக ஒரு ஓவர் வீசி முடிப்பதற்குள் மீண்டும் காயமடைந்து வெளியேறினார்.
இந்நிலையில் முழுமையாக குணமடைவதற்குள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக லக்னோ அணி நிர்வாகம் அவசரமாக களமிறக்கியதே மயங்க் யாதவ் மீண்டும் காயமடைய காரணம் என்று பிரட் லீ விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "மயங்க் யாதவ் சந்தித்துள்ள காயத்திலிருந்து முழுமையாக குணமடைய குறைந்தது 4 - 6 வாரங்கள் தேவைப்படும். அவருடைய காயத்தின் ஆழம் என்ன என்பது பற்றி நமக்குத் தெரியாது. ஆனால் காயத்திலிருந்து குணமடைந்து வந்த முதல் போட்டியிலேயே அவர் மீண்டும் காயமடைந்தார்.
அதற்கு லக்னோ அணி நிர்வாகம் மற்றும் மருத்துவக் குழுவினர் நேரடி காரணமாவார்கள். அதற்கான விலையை கொடுத்த ஒரே நபர் என்றால் அது மயங்க் யாதவ் தான். சிறப்பாக செயல்பட்ட அவரை ஐ.பி.எல். தொடர் முழுவதும் அனைவரும் பார்க்க விரும்பினர். அவருக்கு சரியான ஆலோசனை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது கிடைத்திருந்தால் அவர் இந்த சூழ்நிலையை சந்தித்திருக்க மாட்டார். இதன் காரணமாக அவர் உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பையும் இழந்துள்ளார்" என்று கூறினார்.