தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு திரும்பும் மயங்க் அகர்வால்
|ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - கர்நாடகா இடையிலான போட்டி வரும் 9-ந்தேதி நடைபெற உள்ளது.
பெங்களூரு,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடக அணியினர், திரிபுராவை வீழ்த்திய பிறகு அடுத்த போட்டிக்காக அகர்தலாவில் இருந்து விமானத்தில் சூரத்துக்கு புறப்பட்டனர். அப்போது விமானத்தில் ஏறியதும் கர்நாடக அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் இருக்கையில் உள்ள பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தார்.
குடித்த உடனே அது தண்ணீர் இல்லை, ஆசிட் என்பதை உணர்ந்தும் துப்பினார். ஆனாலும் தொண்டை எரிச்சல், வயிற்று வலியால் அவதிப்பட்டார். வாந்தியும் எடுத்தார். இதன் பின்னர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு செந்த ஊரான பெங்களூருவுக்கு திரும்பினார். உடல்நலம் பாதிப்பால் ரெயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் வரும் 9-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு அவர் திரும்புகிறார்.
பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தற்போது நன்றாக உடல்தகுதியுடன் இருக்கிறேன் என்று மயங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.