மேக்ஸ்வெல்லுக்கு உடல்நலம் பாதிப்பு... விசாரணைக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவு
|மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ நடத்திய இசை நிகழ்ச்சியில் கடந்த வாரம் கலந்துகொண்டார்.
அடிலெய்டு,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ நடத்தும் 'சிக்ஸ் அண்ட் அவுட்' என்ற இசை நிகழ்ச்சியில் கடந்த வாரம் கலந்துகொண்டார். நள்ளிரவில், விருந்தில் மது அருந்திவிட்டு இசையை ரசித்துக் கொண்டிருந்த மேக்ஸ்வெல்லுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு சில மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறுகையில், 'மேக்ஸ்வெல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் எங்களுக்கு தெரியும். இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க உத்தரவிட்டு இருக்கிறோம். சமீபத்தில் அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு பணிச்சுமையே காரணம். மற்றபடி தற்போதைய சம்பவத்துக்கும், நீக்கத்துக்கும் தொடர்பில்லை. அவர் 20 ஓவர் போட்டிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் வேறு எதுவும் சொல்வதற்கில்லை' என்று கூறியுள்ளது.