ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகும் மேக்ஸ்வெல்..? - வெளியான தகவல்
|பெங்களூரு அணி இதுவரை 6 லீக் ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 5 தோல்வி கண்டு 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.
மும்பை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.
இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
பெங்களூரு அணி இதுவரை 6 லீக் ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 5 தோல்வி கண்டு 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு பந்துவீச்சு ஒரு காரணமாக இருந்தாலும் அந்த அணியின் முன்னணி வீரரான மேக்ஸ்வெல் ரன் அடிக்காததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதுவரை ஆர்.சி.பி ஆடிய 6 லீக் ஆட்டங்களில் மேக்ஸ்வெல் 0 ரன், 3 ரன், 28 ரன், 0 ரன், 1 ரன், 0 ரன் மட்டுமே எடுத்துள்ளார். ஆர்.சி.பி அணியின் தொடர் தோல்விகளுக்கு மேக்ஸ்வெல்லின் ஆட்டமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பெங்களூரு அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 15ம் தேதி ஐதராபாத் அணியை பெங்களூருவில் சந்திக்கிறது. இந்நிலையில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் காயம் காரணமாக மேக்ஸ்வெல் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பீல்டிங் செய்யும் போது அவருக்கு வலது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆட மாட்டார் என கூறப்படுகிறது.