< Back
கிரிக்கெட்
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம்; ஜடேஜா அவுட் குறித்து சி.எஸ்.கே பயிற்சியாளரின் கருத்து

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம்; ஜடேஜா அவுட் குறித்து சி.எஸ்.கே பயிற்சியாளரின் கருத்து

தினத்தந்தி
|
13 May 2024 10:27 AM IST

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

சென்னை,

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களம் இறங்கிய சென்னை அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் சி.எஸ்.கே அணி 14 ஓவர்களுக்கு 107 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா கேப்டன் ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் ருதுராஜ் பொறுமையாக கடைசி வரை விளையாட முடிவு செய்திருக்க, ஜடேஜா அதிரடியாக விளையாட முயற்சி செய்தார்.

அப்போது அவேஷ் கான் வீசிய ஓவரில் கட் ஷாட் அடித்த ஜடேஜா 2 ரன்கள் எடுக்க முயற்சி செய்தார். ஜடேஜா இரண்டாவது ரன்களுக்கு பாதி தூரம் ஓடிவிட, பேட்டிங் முனைக்கு சென்ற ருதுராஜ் திரும்பி வரவில்லை. சுதாரித்த ஜடேஜா பந்துவீச்சு முனைக்கு திரும்பி ஓடினார்.

அப்பொழுது பந்தை பிடித்த சஞ்சு சாம்சன் ஸ்டம்பை குறிவைத்து அடிக்க, பந்து ஜடேஜா மேல் தான் பட்டது. ஆனாலும் அம்பயர் அவுட் கொடுத்து விட்டார். இது ஏற்றுக்கொள்ள முடியாத முடிவாக பார்க்கப்பட்டது. கிரிக்கெட் விதிப்படி ஒரு வீரர் எந்த நேர்க்கோட்டில் ஓட ஆரம்பிக்கிறாரோ, அதே பாதையில் ஓட வேண்டும். பந்தை எடுத்து எதிர் அணி அடிக்கும் பொழுது, ஓடி கொண்டிருப்பவர் தன்னுடைய பாதையை மாற்றி, பந்தை தடுப்பது போல் வந்தால், பந்தை ஸ்டெம்பில் அடிக்காவிட்டால் கூட அவுட் கொடுக்கப்படும்.

நீங்கள் நடு ஆடுகளத்தில் ஓட ஆரம்பித்தால் கூட, தொடர்ந்து அப்படியேதான் ஓட வேண்டும். பந்தை எறியும் பொழுது பாதையை மாற்றக்கூடாது. ஜடேஜா சாம்சன் பந்தை எறியும் பொழுது பாதையை மாற்றி ஓடி பந்தை தடுத்ததால், அம்பயர் அவருக்கு அவுட் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின்னர் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி அளித்த பேட்டியில் ஜடேஜா அவுட் ஆனது குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அதை உன்னிப்பாகப் பார்க்கவில்லை. அவர் திரும்பிச் செல்ல முயன்றார். அதனால் அவர் தனது கோணத்தை சிறிது மாற்றினார்.

ஆனால் நேராக ஓடும்போது அவர் தனது கோணத்தை மாற்றவில்லை. இரு பக்கங்களையும் என்னால் பார்க்க முடிகிறது. நடுவர் முடிவெடுப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் ரன்னிற்காக ஓடும் போது உங்கள் கோணத்தை நீங்கள் மாற்ற முடியாது என்று விதி கூறுகிறது. எனவே அது நியாயமான அழைப்பாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்