பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்; இந்த இந்திய வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் - ஹர்பஜன் சிங்
|டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை சந்திக்கிறது.
மும்பை,
9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை வென்றிருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை சந்திக்கிறது. பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டிருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியதாவது, இந்த மைதானத்தில் இந்திய அணி ஏற்கனவே விளையாடி இருப்பதால் அவர்களுக்கு இது சாதகமான அம்சமாக இருக்கும். ஆனால் பாகிஸ்தான் அணி பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளத்தில் விளையாடி விட்டு இங்கே வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிராக தோல்வியை தழுவி இருக்கும் அவர்களால் இங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தயாராவது மிகவும் சவாலாகும்.
இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பும்ரா, சூர்யகுமார் யாதவ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். இருவரும் மேட்ச் வின்னர்கள். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விக்கெட் வீழ்த்தக்கூடியவர். அது மட்டுமின்றி பந்து வீச்சில் நிறைய வித்தியாசத்தை காட்டக்கூடியவர். அதனால் அவரை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.