< Back
கிரிக்கெட்
டி20 உலக கோப்பை போட்டிக்கான  நியூசிலாந்து அணியில் 7-வது முறையாக  மார்ட்டின் கப்தில்

கோப்புப்படம் 

கிரிக்கெட்

டி20 உலக கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணியில் 7-வது முறையாக மார்ட்டின் கப்தில்

தினத்தந்தி
|
21 Sept 2022 3:56 AM IST

அதிக முறை 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை மார்ட்டின் கப்தில் பெறுகிறார்.

கிறைஸ்ட்சர்ச்,

16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் நேரடியாக 'சூப்பர்12' சுற்றில் களம் காணும் நியூசிலாந்து அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் அக்டோபர் 22-ந் தேதி சிட்னியில் மோதுகிறது.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணியில் இடம் பிடித்தவர்களில் 3 பேர் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் மாற்றமின்றி நீடிக்கிறார்கள்.

கடந்த உலக கோப்பை போட்டியில் ஆடிய வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் காயத்தில் இருந்து மீளாததால் அணி தேர்வில் கருத்தில் கொள்ளப்படவில்லை. இதேபோல் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான டிம் செய்பெர்ட், சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்டில் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக பின் ஆலென், மைக்கேல் பிரேஸ்வெல், பெர்குசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆச்சரியம் அளிக்கும் வகையில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட், ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் ஆகியோருக்கும் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

தொடக்க ஆட்டக்காரரான மார்ட்டின் கப்தில் 7-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பை அணிக்கு தேர்வாகியுள்ளார். இதில் ஆடுவதன் மூலம் அவர் அதிக முறை 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெறுகிறார். நியூசிலாந்து அணி வருமாறு:-

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிம் சவுதி, சோதி, மிட்செல் சான்ட்னெர், கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, மார்ட்டின் கப்தில், லோக்கி பெர்குசன், டிவான் கான்வே, மார்க் சாப்மன், மைக்கேல் பிரேஸ்வெல், டிரென்ட் பவுல்ட், பின் ஆலென்.

மேலும் செய்திகள்