< Back
கிரிக்கெட்
சானியா மிர்சாவுடன் திருமணமா?  முகமது ஷமி பதில்
கிரிக்கெட்

சானியா மிர்சாவுடன் திருமணமா? முகமது ஷமி பதில்

தினத்தந்தி
|
20 July 2024 4:20 PM IST

சானியாவும், ஷமியும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக வதந்திகள் வெளியாகின.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை கொண்டுசென்றவர். இந்தத் தொடரில் இவருடைய பங்களிப்பும் பேசப்பட்டது. தற்போது காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார்.

இவர் அவரது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவரது மனைவி இவர் மீது பல்வேறு புகார்கள் தெரிவித்ததுடன், வழக்குகளும் பதிவு செய்துள்ளார். அதனால் அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்சமயம் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

அதேபோல கடந்த சில மாதங்கள் முன்பு சானியா மிர்சா தனது கணவர் சோயப் மாலிக்கை விவாகரத்து செய்தார். சோயப் மாலிக் மூன்றாவது திருமணம் செய்ய முடிவு செய்ததை அடுத்து சானியா அந்த முடிவை எடுத்தார். பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை சோயப் மாலிக் மூன்றாவதாக திருமணம் செய்தார். இதை அடுத்து சோயப் மாலிக் - சானியா மிர்சா பிரிந்து விட்டனர்.

இதனிடையே, சானியாவும், ஷமியும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக வதந்திகள் வெளியாகின. மேலும், சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக எண்ணி பலரும் அந்த செய்தியை பரப்பி வந்தனர்.

இந்நிலையில் அது போன்ற உண்மையற்ற செய்திகளை அதிகாரபூர்வமற்ற பக்கங்களில் சிலர் பொழுதுபோக்குக்காக பரப்புவதாக முகமது ஷமி தெரிவித்துள்ளார். அத்துடன் தைரியம் இருந்தால் அது போன்ற நபர்கள் அதிகாரபூர்வ பக்கங்களில் செய்திகளை பரப்புமாறு ஷமி சவால் விடுத்துள்ளார். மேலும் சானியா மிர்சாவுடன் திருமணம் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது என்று தெரிவிக்கும் ஷமி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

"சமூக ஊடகங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ளவும். இது போன்ற ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இது வித்தியாசமானது. சிலர் வேடிக்கைக்காக வேண்டுமென்றே இப்படி செய்கின்றனர். எனவே நான் என்ன செய்ய முடியும்? கைபேசியை திறந்தால் இது போன்ற மீம்ஸ்களைத்தான் பார்க்க முடிகிறது. எனவே அந்த மீம்ஸ்கள் வேடிக்கையாக உருவாக்கப்பட்டவை என்று மட்டுமே நான் கூற விரும்புகிறேன்.

ஆனால் அது ஒருவரின் வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருப்பதால் நீங்கள் அதைப் பற்றி சிந்தித்து பகிர வேண்டும். அந்த நபர்கள் இது போன்ற செய்திகளை அதிகாரபூர்வமற்ற பக்கங்களில் வெளியிட்டு தப்பிக்கிறார்கள். ஆனால் உண்மையாக உங்களுக்கு தைரியம் இருந்தால் அதிகாரபூர்வ பக்கத்தில் அதை சொல்லுங்கள். நான் பதிலளிக்கிறேன். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு வெற்றியடைய முயற்சி செய்யுங்கள். மக்களுக்கு உதவுங்கள். உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்று நான் நம்புகிறேன்" என கூறினார்.

மேலும் செய்திகள்