'மன்கட் அவுட்' விவகாரம் - தீப்தி சர்மாவுக்கு ஆதரவளித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்
|மன்கட் அவுட் முறை ஐ.சி.சி.யால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இங்கிலாந்து வீரர்கள் பலர் இதனை விமர்சித்து வருகின்றனர்.
லண்டன்,
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 43.4 ஒவர்களில் 153 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தின் 43-வது ஓவரில், இங்கிலாந்து வீராங்கனை சார்லீ டீன், இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவால் மன்கட் முறையில் அவுட் செய்யப்பட்டது தற்போது பேசுப்பொருளாகியுள்ளது. ஐ.சி.சி.யின் புதிய கிரிக்கெட் விதிகளின்படி, மன்கட் முறையில் அவுட் செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இங்கிலாந்து வீரர்கள் பலர் இதனை விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து சாம் பில்லிங்க்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், "இது விளையாட்டின் மாண்பை குறைக்கும் செயலாக தெரியவில்லையா?" என்று பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த மற்றொரு இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், "பந்துவீச்சாளரின் கையில் இருந்து பந்து விடுபடும் வரை, எதிர்முனையில் இருக்கும் பேட்டர் க்ரீசுக்கு உள்ளே இருப்பது அவ்வளவு கடினமான காரியம் இல்லையே" என பதிவிட்டுள்ளார்.