''மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்'' ரசிகர்களை எச்சரித்த மஞ்ச்ரேக்கர்..காரணம் என்ன?
|ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
மும்பை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 14-வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் போடுவதற்கு மைதானத்திற்கு ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரையும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வரவேற்றார். அப்போது ஹர்திக் பாண்ட்யா பெயரை மஞ்ச்ரேக்கர் சொன்னதும், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அவருக்கு எதிராக என சத்தமிட ஆரம்பித்தனர். அப்போது பேசிய மஞ்ச்ரேக்கர் "மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்" என்று ரசிகர்களை எச்சரிக்கை செய்தார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில், ஹர்திக் பாண்ட்யா மைதானத்தில் வைத்து ரசிகர்களால் வெறுப்பெற்றபட்டார். மேலும் அங்கு மைதானத்தில் நாய் ஒன்று புகுந்த போதும் "ஹர்திக் ஹர்திக்" என சத்தமிட்டு ரசிகர்கள் வெறுப்பை வெளிப்படுத்தினர். ஐதராபாத் மைதானத்திலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.