மந்தனா அதிரடி: அயர்லாந்துக்கு 156 ரன் இலக்கு நிர்ணயித்த இந்தியா...!
|பெண்கள் டி20 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
ஜோகனர்ஸ்பர்க்,
பெண்கள் டி20 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினர். சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஷபாலி வர்மா 24ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் களம் புகுந்தார்.
இந்நிலையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்து அசத்தினார். மறும்முனையில் கேப்டன் கவுர் 13 ரன் மற்றும் அடுத்து இறங்கிய ரிச்சா கோஷ் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஜெமிமா களம் புகுந்தார். மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய மந்தனா 56 பந்தில் 87 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் மந்தனா 87 ரன்கள் குவித்தார். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்க உள்ளது.