ஆட்ட நாயகன் விருது வென்ற வங்காளதேச வீரரின் நெஞ்சை தொடும் செயல்... ரசிகர்கள் நெகிழ்ச்சி
|பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முஷ்பிகுர் ரஹிம் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
ராவல்பிண்டி,
பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 448 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. சாத் ஷகீல் (141 ரன்), முகமது ரிஸ்வான் (171 ரன்) சதம் அடித்தனர்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 167.3 ஓவர்களில் 565 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்கள் குவித்தார்.
117 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 146 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் வங்காளதேசம் வெற்றி பெற வெறும் 30 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வென்றதற்காக கிடைத்த பரிசுத்தொகையை வங்காளதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக முஷ்பிகுர் ரஹிம் அறிவித்துள்ளார். இது நெஞ்சை தொடும் விதமாக அமைந்துள்ளது. ரசிகர்கள் ரஹிமின் செயலால் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.