மேஜர் லீக் கிரிக்கெட்: லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை வீழ்த்தி வாஷிங்டன் ப்ரீடம் வெற்றி
|வாஷிங்டன் ப்ரீடம் தரப்பில் டிராவிஸ் ஹெட் 54 ரன்கள் எடுத்தார்.
மோரிஸ்வில்லே,
இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். போன்று அமெரிக்காவில் மேஜர் லீக் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 2-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் சுனில் நரேன் தலைமையிலான லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ப்ரீடம் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 129 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. லாஸ் ஏஞ்சல்ஸ் தரப்பில் அதிகபட்சமாக சைப் படார் 35 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் ப்ரீடம் அணி தரப்பில் நேத்ராவல்கர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வாஷிங்டன் ப்ரீடம் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டிராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் ஸ்டீவ் ஸ்மித் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 32 பந்தில் 54 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் புகுந்த ரச்சின் ரவீந்திரா 11 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஆண்ட்ரிஸ் கௌஸ் களம் இறங்கினார். இறுதியில் வாஷிங்டன் ப்ரீடம் அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.