மேஜர் லீக் கிரிக்கெட்: சான் பிரான்சிஸ்கோ அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்...!
|டு பிளெஸ்சிஸ் தலைமையிலான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
மோரிஸ்வில்லே,
மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சான் பிரான்சிஸ்கோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. பிரான்சிஸ்கோ அணி தரப்பில் வேட் 49 ரன், பிஷ்னோய் 35 ரன் எடுத்தனர். டெக்சாஸ் அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட், டேனியம் சாம்ஸ், சாண்ட்னெர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி மட்டுமின்றி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் டெக்சாஸ் அணி களம் இறங்கியது. டெக்சாஸ் தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் டு பிளெஸ்சிஸ் 0 ரன், கான்வே 30 ரன், அடுத்து களம் இறங்கிய ஷெட்டி 4 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து களம் இறங்கிய மிலிந் குமார் ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். மறுமுனையில் களம் இறங்கிய மில்லர் 10 ரன், சாண்ட்னெர் 7 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மிலிந் குமார் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதோடு பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது.