< Back
கிரிக்கெட்
மேஜர் லீக் கிரிக்கெட்: டெக்சாஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எம்.ஐ. நியூயார்க்...!

Image Courtesy: @MINYCricket

கிரிக்கெட்

மேஜர் லீக் கிரிக்கெட்: டெக்சாஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எம்.ஐ. நியூயார்க்...!

தினத்தந்தி
|
29 July 2023 11:44 AM IST

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க்-சீட்டில் ஆர்கஸ் அணிகள் மோத உள்ளன.

டல்லாஸ்,

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சீட்டில் ஆர்கஸ் அணி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து தோல்வி அடைந்த டெக்சாஸ் அணி நேற்று நடைபெற்ற சேலஞ்சர்ஸ் ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற நிலையில் இரு அணிகளும் களம் இறங்கின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெக்சாஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே மற்றும் டு பிளெஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டு பிளெஸ்சிஸ் 6 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய சாண்ட்னெர் 6 ரன், ஷெட்டி 14 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து கான்வேயுடன் மிலிந் குமார் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். இதில் கான்வே 38 ரன், மிலிந் குமார் 37 ரன், அடுத்து களம் இறங்கிய டேனியல் சாம்ஸ் 8 ரன், மில்லர் 17 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் டெக்சாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்களே எடுத்தது. இதையடுத்து 159 ரன் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் எம்.ஐ. அணி களம் இறங்கியது.

எம்.ஐ. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஜஹாங்கீர் 36 ரன், ஸ்டேடன் 6 ரன், அடுத்து களம் இறங்கிய பூரன் 23 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து களம் இறங்கிய டெவால்ட் பிரெவிஸ் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

இறுதியில் எம்.ஐ.நியூயார்க் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 162 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எம்.ஐ. தரப்பில் பிரெவிஸ் 41 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டெக்சாஸ் அணியை வீழ்த்தி எம்.ஐ. நியூயார்க் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் எம்.ஐ. நியூயார்க் - சீட்டில் ஆர்கஸ் அணிகள் நாளை மோத உள்ளன.

மேலும் செய்திகள்