மேஜர் லீக் கிரிக்கெட்: ஹென்ரிச் கிளாசென் அதிரடி சதம்...எம்.ஐ அணியை வீழ்த்தி சீட்டில் ஆர்கஸ் அபார வெற்றி...!
|மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க் அணியும், சீட்டில் ஆர்கஸ் அணியும் மோதின.
மோரிஸ்வில்லே,
மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க் அணியும், சீட்டில் ஆர்கஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய எம்.ஐ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது.
எம்.ஐ. அணி தரப்பில் பூரன் 68 ரன், பொல்லார்ட் 34 ரன் எடுத்தனர். சியாட்டில் அணி தரப்பில் இமாத் வாசிம், ஹர்மீத் சிங் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 195 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சீட்டில் ஆர்கஸ் அணி களம் இறங்கியது.
சீட்டில் ஆர்கஸ் அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டி காக் 9 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய ஜெயசூர்யா 0 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் நவுமன் அன்வருடன் ஹென்ரிச் க்ளாசென் இணைந்தார். இந்த இணை அதிரடியில் மிரட்டி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.
இதில் நவுமன் அன்வர் 51 ரன்னில் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய க்ளாசென் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் சீட்டில் ஆர்கஸ் அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடரில் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த சீட்டில் ஆர்கஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், வாஷிங்டன் ப்ரீடம், எம்.ஐ.நியூயார்க் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. கடைசி இரு இடங்களை பிடித்த சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.