மேஜர் லீக் கிரிக்கெட்: ஹெட், மேக்ஸ்வெல் அதிரடி... இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வாஷிங்டன் ப்ரீடம்
|மேஜர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற குவாலிபயர் 1 ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் - வாஷிங்டன் ப்ரீடம் அணிகள் மோதின.
டல்லாஸ்,
இறுதி கட்டத்தை எட்டியுள்ள மேஜர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணியை தீர்மானிக்கும் குவாலிபயர் 1 ஆட்டத்தில் கோரி ஆண்டர்சன் தலைமையிலான சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியும், ஸ்டீவ் சுமித் தலைமையிலான வாசிங்டன் ப்ரீடம் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வாஷிங்டன் ப்ரீடம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சான் பிரான்சிஸ்கோ அணியின் பேட்ஸ்மேன்கள் வாஷிங்டன் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். குறிப்பாக ரச்சின் ரவீந்திரா, மார்கோ ஜான்சன் மற்றும் நேத்ராவல்கர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இருப்பினும் சான் பிரான்சிஸ்கோ அணியின் ஹசன் கான் அரைசதம் அடித்து அணி கவுரமான நிலையை எட்ட உதவினார். வெறும் 19 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த சான் பிரான்சிஸ்கோ 145 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹசன் கான் 57 ரன்கள் குவித்தார். வாஷிங்டன் தரப்பில் ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளும், நேத்ராவல்கர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 149 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய வாஷிங்டன் ப்ரீடம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் சுமித் களமிறங்கினர். இதில் ஸ்டீவ் சுமித் 1 ரன்னிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய ஆட்ரியஸ் கவுஸ் 9 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 3 ரன்களிலும் ஆட்டமிழந்து அணிக்கு பின்னடைவை கொடுத்தனர்.
அதன்பின் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் , டிராவிஸ் ஹெட்டுடன் கை கோர்த்து இருவரும் அதிரடியில் களமிறங்கினர். சான் பிரான்சிஸ்கோ பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இருவரும் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். வெறும் 15.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை கடந்து வெற்றி பெற்ற வாஷிங்டன் ப்ரீடம் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 77 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்களும் குவித்தனர்.