மேஜர் லீக் கிரிக்கெட்; அமெரிக்காவில் களம் காணும் சென்னை சூப்பர் கிங்ஸ்...!
|அமெரிக்காவில் நடைபெற இருக்கும் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 என்கிற தொடரில் சிஎஸ்கே குழுமத்துடன் இணைந்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற ஒரு அணி உருவாக்கப்பட்டுள்ளது.
மும்பை,
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்று மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடருக்கு உலக அளவில் கிடைத்த வரவேற்பின் காரணமாக தற்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் நிர்வாகங்களும் அவர்களது நாட்டில் டி20 லீக் போட்டிகளை அறிமுகப்படுத்தி நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெற இருக்கும் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 என்கிற லீக் போட்டிகளானது முதல் சீசனாக இந்தாண்டு நடைபெற இருக்கின்றன. இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கிறது.
அதில் சிஎஸ்கே குழுமத்துடன் இணைந்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற ஒரு அணி உருவாக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் நகரை தலைமையாக கொண்ட இந்த அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங்கே முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு சிஎஸ்கே அணியில் இருந்த உதவி பயிற்சி நிர்வாகிகள் அனைவரும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடுவும் இணைந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி பிசிசிஐ தொடர்புடைய அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வினை அறிவித்த ராயுடு தற்போது அமெரிக்காவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.
அவருக்கு இந்த வாய்ப்பினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகமே வழங்கி உள்ளது. அதேபோன்று சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் பிராவோவும் இந்த தொடரில் ஒரு வீரராக விளையாடுகிறார்.
இப்படி அமெரிக்காவில் நடைபெறவுள்ள இந்த லீக் போட்டியில் விளையாடும் அந்த வாய்ப்பு குறித்து அம்பத்தி ராயுடுவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரானது ஜூலை 14-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் ஏழு வீரர்களை தேர்வு செய்துள்ளது. அந்த வகையில் சென்னை அணிக்காக விளையாடி வரும் டேவான் கான்வே மற்றும் மிட்சல் சான்ட்னர் ஆகியோரும் இந்த தொடரில் விளையாடுகின்றனர்.
அதேபோன்று ஆஸ்திரேலிய வீரர் டேனியல் சாம்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர்கள் டேவிட் மில்லர், ஜெரால்டு கோட்சே ஆகியோரும் தற்போது இடம் பிடித்துள்ளனர். அதனைத்தவிர்த்து மீதமுள்ள வீரர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த உள்ளூர் வீரர்களாக இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.