< Back
கிரிக்கெட்
100 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு நாதன் லயன் இல்லாமல் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி..!
கிரிக்கெட்

100 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு நாதன் லயன் இல்லாமல் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி..!

தினத்தந்தி
|
3 July 2023 1:36 PM IST

காயம் காரணமாக எஞ்சிய ஆஷஸ் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் வெளியேறினார்

லண்டன்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது. இதன் 2-வது நாள் ஆட்டத்தில் பீல்டிங்கின் போது ஆஸ்திரேலிய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் வலது பின்னங்காலில் காயமடைந்தார்.

வலியால் அவதிப்பட்ட அவர் கைத்தாங்களாக வெளியே அழைத்து செல்லப்பட்டார். அதன் பிறகு பவுலிங் செய்யவரவில்லை. மறுநாள் மைதானத்திற்கு ஊன்றுகோல் உதவியுடன் வருகை தந்த நாதன் லயன் களம் இறங்கவில்லை. பின்னர் டெஸ்டின் 4 வது நாளில், ஆஸ்திரேலிய அணிக்கு 9வது விக்கெட் போன பின்னர் யாரும் எதிர்பார்க்காத நிலையில், நாதன் பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் வந்தார். 13 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு பவுண்டரியுடன் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்த சூழலில் அவரால் ஆஷஸ் தொடரில் எஞ்சிய டெஸ்டுகளில் விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் காயம் காரணமாக எஞ்சிய ஆஷஸ் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் வெளியேறியுள்ளார். 35 வயதான லயன் இதுவரை 122 டெஸ்டுகளில் ஆடி 496 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். முன்னதாக ஆஷஸ் இரண்டாவது போட்டி அவர் தொடர்ச்சியாக விளையாடிய 100-வது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

நாதன் லயன் ஆஷஸ் தொடரின் எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளநிலையில், ஆஸ்திரேலிய அணியில் இன்னும் மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. வியாழன் அன்று ஹெடிங்லியில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அவருக்குப் பதிலாக சக ஆப்ஸ்பின்னர் டோட் மர்பி இடம்பெறுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

மேலும் செய்திகள்