வாழ்வா - சாவா ஆட்டத்தில் லக்னோ அணி... டெல்லியுடன் இன்று மோதல்
|ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் டெல்லி - லக்னோ அணிகள் மோதுகின்றன.
புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள 64-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.
டெல்லி அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது. மெதுவாக பந்து வீச்சு பிரச்சினையில் 3-வது முறையாக சிக்கியதால் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்ட டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இந்த ஆட்டத்தில் களம் திரும்ப உள்ளார்.
லக்னோ அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க தனது எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெறுவது கட்டாயமாகும். இந்த ஆட்டத்தில் தோற்றால் வெளியேற வேண்டியது வரும். எனவே இன்றைய ஆட்டம் அந்த அணிக்கு வாழ்வா-சாவா போன்றதாகும்.
டெல்லி அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் (6 விக்கெட் வித்தியாசம்) தோல்வி கண்ட லக்னோ அணி அதற்கு பதிலடி கொடுத்து பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதே நேரத்தில் உள்ளூரில் தனது கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்ய டெல்லி அணி தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்த ஆட்டம் இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ளது.