'மனித உயிர்களின் இழப்பு எப்போதும் வேதனைக்குரியது' - ஒடிசா ரெயில் விபத்துக்கு பாக். கிரிக்கெட் வீரர் வருத்தம்...!
|ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வருத்தம் தெரிவித்துள்ளார்
கராச்சி,
மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி தடம் புரண்டது. இந்த பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலும் மோதி தடம்புரண்டதால் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்தது. கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மோசமான ரெயில் விபத்தாக கருதப்படும் இந்த சம்பவத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அதேநேரம் காயம் அடைந்தவர்கள் பாலசோர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு சிறப்பான சிகிச்சையை உறுதி செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். எனவே காயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரிகளில் சிறப்பு சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
நாம் அனைவரும் ஒரே சமுதாயமாக இருப்பதால் மனித உயிர்கள் இழப்பது எப்போதும் வேதனையானது.
இந்தியாவில் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது இதயமும் பிரார்த்தனையும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.