< Back
கிரிக்கெட்
களத்தில் சந்திக்க ஆவலுடன் உள்ளேன் விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் டுவிட்டர் பதிவு
கிரிக்கெட்

'களத்தில் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்' விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் டுவிட்டர் பதிவு

தினத்தந்தி
|
17 Jan 2023 12:51 AM IST

விபத்துக்கு பிறகு 25 வயதான ரிஷப் பண்ட் நேற்று முதல்முறையாக தனது டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

மும்பை,

இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த மாதம் 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார். சாலையின் தடுப்பில் மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய அவர் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கால்முட்டி காயத்துக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர் இந்த பாதியில் இருந்து முழுமையாக மீள குறைந்தது 6 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டி வரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விபத்துக்கு பிறகு 25 வயதான ரிஷப் பண்ட் நேற்று முதல்முறையாக தனது டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், 'நான் சீக்கிரம் குணமடைய வேண்டி விருப்பம் தெரிவித்தவர்களுக்கும், ஆதரவாக இருந்தவர்களுக்கும் பணிவோடு நன்றி கடன்பட்டுள்ளேன். எனக்கு நடந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான நடைமுறைகள் தொடங்கி விட்டது. எனக்கு முன்பாக உள்ள சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். எனக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு நன்றி. உங்களின் அன்பான வார்த்தைகள், ஊக்குவித்தலுக்காக ரசிகர்கள், சக வீரர்கள், டாக்டர்கள் ஆகியோருக்கும் இதயபூர்வமான நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரையும் களத்தில் காண ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்