அதிகமுறை சதத்தை தவறவிட்டவர்கள் பட்டியல்: 2 வது இடத்தில் வில்லியம்சன்
|உலகக்கோப்பையில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 95 ரன்களில் அவுட்டானார்.
பெங்களூரு,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அரையிறுதிக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நெருக்கடியில் இரு அணிகளும் உள்ளன. இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே ஆட்டமும் அமைந்தது.
குறிப்பாக நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் பந்து வீச்சை சிதறடித்தனர். பாகிஸ்தான் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ஷாகின் அப்ரிடி பந்து வீச்சும் எடுபடவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 95 ரன்களில் அவுட்டானார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 90-99 ரன்களில் ஆட்டமிழந்தவர்களின் பட்டியலில் 2வது இடத்தை அவர் பிடித்துள்ளார். இவர் மொத்தம் 7 முறை சதத்தை தவறவிட்டுள்ளார். மேலும் நேதன் ஆஸ்டில், கிராண்ட் பிளவர், அரவிந்த டி சில்வாவை சமன் செய்துள்ளார். இவர்கள் தலா 7 முறை 90-99 ரன்களுக்குள் அவுட்டாகியுள்ளனர். இந்த பட்டியலில் எவரும் எட்ட முடியாத தூரத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவர் 17 முறை தனது சதத்தை தவறவிட்டுள்ளார்.