பாகிஸ்தானைப்போல் இந்தியாவையும் அவர்களது இடத்தில் வீழ்த்தி வரலாறு படைப்போம்- மார்க் வுட்
|இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.
ஐதராபாத்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இந்த போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது, 'இங்குள்ள ஆடுகளங்களில் எகிறும் பவுன்சர் பந்துகள் அரிதாகவே பலன் அளிக்கும். சில சமயம் ஆடுகளம் இருவிதத் தன்மையுடன் காணப்படும். அப்போது ஆடுகளம் மெதுவாக இருக்கும் பட்சத்தில், பந்துவீச்சாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். இந்திய கேப்டன் ரோகித் சர்மா போன்ற வீரர்கள் ஷாட்பிட்ச் பந்தை சமாளிப்பதில் சிறந்தவர் என்பதை அறிவேன். அதற்காக நான் பவுன்சர் பந்துகளை வீசமாட்டேன் என்று அர்த்தமில்லை. தேவையான நேரத்தில் துல்லியமாக பவுன்சர்களை போட்டு நெருக்கடி கொடுப்பேன்.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் விளையாடிய 3 டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினோம். இதேபோல் இந்தியாவையும் அவர்களது இடத்தில் வீழ்த்தி வரலாறு படைக்க இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது' இவ்வாறு அவர் கூறினார்.